நீங்கள் எந்த கட்சி?

            மன்னை தாஜுதீன்

 

          அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. யார் எந்த கட்சியுடன் கூட்டு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ஒவ்வொரு கட்சியும் கணக்குப்போட்டுக் கொண்டு இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளும் விதிவிலக்கல்ல. இச்சமயத்தில்நாம் எந்த கட்சியினராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

          முஸ்லிம் என்றால் யார்? அவன் யாருக்காக உழைக்க வேண்டும்? ஏன் உழைக்க வேண்டும்? எத்தகைய இலட்சியவாதியாக மிளிர வேண்டும்? அவன் இந்த பூமிப் பந்தில் எத்தகைய மற்றத்தை ஏர்படுத்த வேண்டும்? ஏன் ஏற்படுத்த வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் மனிதன் யார், அவனிடமிருக்கும் அறிவு, திறமை, ஆற்றல், செல்வாக்கு, செல்வம், வசதிவாய்ப்பு, நேரம், ஆயுள் இவை அனைத்தையும் யார் தந்தது? எதற்காக தரப்பட்டன? என்ற வினாவுக்கு விடை காண வேண்டும்.

          எந்தப் பொருளும் எந்த நோக்கமும் இன்றி படைக்கப் படவில்லை. உயர்திறனும் மதிநுட்பமும் கொண்ட படைப்பின் அற்புதமாக திகழும் மனித இனம் நோக்கமின்றியோ, காரணமின்றியோ படைக்கப்பட்டு இருக்குமா? இருக்காது. அப்படியென்றால் அந்த நோக்கத்தை யார் சொல்ல வேண்டும்? நம்மைப் போன்ற மனிதரா? அல்லது நம்மைப் படைத்த இறைவனா?

          ஐயத்திற்கு இடமின்றி நம்மைப் படைத்தவன்தான் படைத்த நோக்கத்தைச் சொல்ல வேண்டும். உருவாக்குபவன்தானே விதிகளையும் விதிமுறைகளையும் உண்டாக்க வேண்டும். நாம் யாரை வணங்க வேண்டும், யாரை வணங்கக் கூடாது, எதனை உண்ண வேண்டும், எதனை உண்ணக் கூடாது, எதனைப் பார்க்க வேண்டும், எதனைப் பார்க்கக் கூடாது, எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக் கூடாது முதலியவற்றையெல்லாம் படைத்தவன் தானே சொல்ல வேண்டும். ஆம்..! சொல்லியிருக்கிறான். அதற்காகத்தான் இறைத்தூதர்களை அனுப்பினான். அவர்கள் மூலம் தன் திட்டத்தையும் அருளினான். அந்த திட்டத்திற்குப் பெயர்தான் இஸ்லாம். அதனை ஏற்றுக் கொள்பவர்தான் முஸ்லிம். இப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ்பவனாகவும், அவனுக்கு மட்டுமே தன் தலையை சாய்ப்பவனாகவும் ஆகி விடுகின்றான். இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மட்டுமே கீழ்படிந்து வாழ்பவனாக மாறி விடுகின்றான்.

          தனது மணோ இச்சைக்கோ தன்னைப் போன்ற பிற மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கோ அடிபணிவதில்லை. சகமனிதனை அல்லது பிற படைப்பினங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இப்படிப்பட்டவனால்தான் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற முடியும். இப்படிப்பட்ட மனிதன் மீதுதான் பொறுப்பும், கடமையும் சுமத்தப்படுகின்றன. அப்பொறுப்பும் கடமையும் என்ன?

          பூமியில் இறைவனின் வாக்கு மேலோங்க வேண்டும்; மனிதர்கள் மீதான அடிமைத்தளைகள் அகற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தன்னுடைய அறிவு, திறன், வசதி வாய்ப்புகள், செல்வாக்கு, ஆயுள் என அனைத்தையும் பயன்படுத்தி முழு வீச்சோடு பாடுபட வேண்டும். இத்திறமைகளைப் பயன்படுத்தி மனிதகுல முன்னேற்றத்திற்காகவும் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும், உலக அமைதிக்காகவும் இயற்கையின் இரகசியங்களை வெளிப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும், நீதிமிக்க சமூகங்களை நிலைநாட்டுவதற்காகவும் அவன் உழைக்க வேண்டும்.

          இது ஒரு மாபெரும் பணியாகும். இந்த மகத்தான பணி ஏதோ ஓர் ஊரிலோ, ஒரு கிராமத்திலோ மட்டும் செய்யக் கூடியதன்று. மாறாக ஒவ்வொரு குக்கிராமத்திலும் இன்று குக்கிராமமாக மாறிப்போன முழு உலகிற்கும் செய்ய வேண்டிய பணியாகும்.

           உலகம் இறைவனின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் போதுதான் அமைதி பெறும் என்பது உறுதி. இந்த நோக்கத்தைக் கொண்ட தனிமனிதர்கள் ஒரு குழுவாக, அமைப்பாக, கட்சியாக இணைய வேண்டும். ஆம், நாமும் கட்சிக்காரர்கள்தாம். அல்லாஹ்வின் கட்சிக்காரர்கள்.

          நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம்; ஏதேனும் இனத்திற்காகவோ, மொழிக்காகவோ பாடுபடும் கட்சிக்காரனைப் பாருங்கள். எத்தகைய அர்ப்பணிப்பு! உழைப்பு! தனது தாய் மரணப் படுக்கையில் இருக்கும் நிலையில் கூட தனது கட்சிப் பரப்புரைக்காகப் பயணம் செய்து, தனது பணம், நேரம், அறிவு, ஆற்றல் அனைத்தையும் முழுவீச்சில் செயல்படுத்தி தனது கட்சியை ஆட்சியில் அமர்த்திய பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றான். அப்பப்பா! என்ன ஒரு தியாகம்.

          தனது கட்சியைக் குறித்து யாரேனும் தவறாகவோ, இழிவாகவோ பேசினால் விட்டுவிடுகிறானா? தனது தலைவரைப் பிறர் கேவலமாகப் பேச அனுமதிக்கின்றானா? கட்சித்தலைவரின் நன்மைக்காத் டன் உடல் உறுப்பைச் சிதைக்கவும் தயாராகி விடுகின்றான். அவ்வளவு ஏன், கட்சியின் மானத்தைக் காக்க உயிரைக் கொடுக்கவும் தயங்குவதில்லை.

          இவையெல்லாம் எதற்காக? தான் சார்ந்த கட்சியும், தான் பின்பற்றும் தலைவரும்தான். இந்தச் சமுதாயத்திற்கு நன்மை செய்வார்கள் எனும் உறுதியான நம்பிக்கை. ஆனால் அந்தோ பரிதாபம்! அந்தக் கட்சித் தொண்டன் எந்தத் தலைவருக்காகப் பாடுபடுகின்றானோ அந்தத் தலைவரா அவனைப் படைத்தார்? வாழ்வதற்கு உயிர், சுவாசிக்க காற்று, ஓடியாடி உழக்க உடல், உடலில் புதைந்திருக்கும் எண்ணற்ற ஆற்றல்கள், சிந்திக்கும் திறன், பேச்சாற்றல் ஆகிய அனைத்தையும் அந்தத் தலைவரா வழங்கினார்? இல்லையே! இவற்றையெல்லாம் அவரால் படைக்கவோ, உற்பத்தி செய்யவோ முடியாது. ஏனெனில் அவர் இறைவன் அல்லர்.

          இப்போது சொல்லுங்கள். நீங்கள் உங்களைப் படைத்தவனைத்தானே இறைவனாக, அதிபதியாக, எஜமானனாக ஏற்றிருக்கிறீர்கள்? அவனுடைய வாக்கு மேலோங்கவும், அவனுடைய சட்ட திட்டங்கள் வெற்றி பெறவும் தானே நீங்கள் உழைக்க வேண்டும். அதற்கு மற்றமாக செயல்பட்டால் உங்கள் அதிபதி உங்களைப் பற்றி என்ன நினைப்பான்?

          ஒருவன் உங்களுடைய நிறுவனத்தில் நீங்கள் விதித்துள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வேலைக்குச் சேர்கிறான். உங்களிடமிருந்து சம்பளம், ஊக்கத்தொகை, இதர சலுகைகள் என  எல்லாவற்றையும் பெறுகிறான். இவையனத்தையும் பெற்றுக் கொண்டு உங்களுக்கு எதிராக மற்றொரு நிறுவனத்துக்கு உதவுகிறான். அல்லது அதற்காக உழைக்கிறான் எனில் அதை ஒப்புக் கொள்வீர்களா?

          ஒரு கட்சிக்காரன் தனது கட்சியில் இருந்து கொண்டே இன்னொரு கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறான், உழைக்கிறான், ஓட்டுப்போடுகிறான் எனில் விடுவீர்களா?

          துரோகி, நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவன், நன்றி கெட்டவன்,தன்னல வெறி பிடித்தவன் முதலிய வசைகள் அவன் மீது வீசப்படும் அல்லவா?

          உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். முஸ்லிம்களாகிய நாம் நம்மைப் படைத்த இறைவனுக்காகப் பாடுபட வேண்டுமா? அல்லது வேறு யாருக்காகவுமா?

 இறைவனது  கட்சி மேலோங்க உழைக்க வேண்டுமா? அல்லது இதர கட்சிகளுக்காக கொடி பிடிக்க வேண்டுமா?

மனித இனத்தை துண்டு துண்டுகளாய்ப் பிரித்து, மோதவிட்டு , வெறுப்பை விதைத்து பதவி அறுவடை காண்பவர்களுக்காக உழைக்க வேண்டுமா? அல்லது மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகள் , ஒரு சீப்பின் பற்கள் போன்றவர்கள் எனக் கொள்கை வகுத்துத் தந்த தூய இறைவனின் கட்சிக்காகப் போராட வேண்டுமா?

முடிவு செய்ய வேண்டிய காலக் கட்டத்திலும், கட்டாயத்திலும் நாம் உள்ளோம். ஏனெனில் நம்மைப் படைத்தவனின் எதிர்பார்ப்பு நாம் அவனுக்காக, அவனுடைய கட்சிக்காக, அவனுடைய ஆட்சி மலர்வதற்காக உழைக்க வேண்டும் என்பதுதான் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கைக்குத் தேவையான அருட்கொடைகள் அனைத்தையும் அள்ளி அள்ளி வழங்கிய இறைவனுக்காக, அவனுடைய கட்சிக்காக உழைப்பதை விட்டு வேறு ஒருவருக்கா? சே..! அத்தகைய நன்றி கெட்ட, கேடு கெட்ட இழிநிலையிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக…!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழியுடன் நிறைவு செய்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், பிறரது உலக நன்மைக்காக தனது மறுமையை யார் பாழ்படுத்திக் கொள்கிறாரோ அவர்தாம் உங்களில் பரிதாபத்திற்குரியவர் ஆவார்.

நன்றி – சமரசம்

This entry was posted in கருத்தாக்கங்கள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>